அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டுப் படைகள் சிரியா மீது வான் வழி, ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டுப் படைகள் சிரியா மீது வான் வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கின.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சி உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. இதில் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் நாடுகளும், அவருக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கரம் கோர்த்து சண்டையிட்டு வருகின்றன.

இந்த நிலையில் சொந்த குடிமக்கள் மீது சிரியா அரசு ரசாயன ஆயுத தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். சிரியாவில் ரசாயன ஆயுத கிடங்குகளை அழிக்கும் நோக்குடன் தாக்குதல் நடத்தவுள்ளதாக அறிவித்த டிரம்ப், கூட்டுப் படைகளுக்கும் அழைப்பு விடுத்தார். அல் ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா, ஈரான் நாடுகளையும் டிரம்ப் கடுமையாக கண்டித்தார்.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கின. வான் வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை கூட்டுப் படைகள் தொடங்கியுள்ளன.

சிரியா ராணுவமும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன. தற்போது வரை சிரியாவை நோக்கி ஏவப்பட்ட 13 ஏவுகணைகளை இடைமறித்து சிரியா வான் படைகள் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழலை அமெரிக்கா முன் கூட்டியே திட்டமிட்டு விட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் மீண்டும் தங்களை அமெரிக்கா பயமுறுத்துவதாகவும், இதற்கான முழு பொறுப்பும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸையே சாரும் என்றும் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனாடோலி அண்டோனோவ் கண்டித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் சிரியா மீது தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published.